போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார்

வீரப்பனை வேட்டையாடிய போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார் நேற்று ஓய்வுபெற்றார்.

Update: 2018-06-13 22:45 GMT

புதுடெல்லி,

சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் முதலில் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக 1975–ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து தருமபுரி, சேலம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

பின்னர் மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார், அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணியாற்றினார். பின் மீண்டும் தமிழக பணிக்கு திரும்பி திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு ஆனார். 1991–ல் ஜெயலலிதா முதல்–அமைச்சர் ஆனதும் அவரது மெய்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா 2001–ல் மீண்டும் முதல்–அமைச்சரான பிறகு கே.விஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆனார்.

அவர் போலீஸ் கமி‌ஷனராக இருந்தபோது சென்னையில் 15–க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் கமி‌ஷனராக இருந்த நிலையில் 2003–ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்த கமாண்டோ படையின் தலைவர் ஆனார். 2004–ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பிறகு கே.விஜயகுமார் மீண்டும் மத்திய பணிக்கு அனுப்பப்பட்டார்.

2012–ம் ஆண்டு மத்திய ஆயுதப்படை போலீசில் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியபோது அவர் பணி ஓய்வுபெற்றார். அவரது சிறப்பான பணித்திறனை பாராட்டி அவருக்கு சிறப்பு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு பணிக்காக மத்திய உள்துறையில் சேர்க்கப்பட்ட அவர் நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.

6 ஆண்டுகாலம் பணிநீட்டிப்பில் பணியாற்றிய கே.விஜயகுமார் நேற்று அந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்