வேளாண் புரட்சி செய்த நெல் வகையை கண்டறிந்த ஏழை விவசாயி மரணம்; வீட்டிற்கு சென்றார் ராகுல் காந்தி
வேளாண்மையில் புரட்சி ஏற்படுத்திய எச்.எம்.டி. நெல் வகையை கண்டறிந்த ஏழை விவசாயி உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிற்கு ராகுல் காந்தி இன்று சென்றார்.;
புதுடெல்லி,
மகாராஷ்டிராவில் நான்டெட் மாவட்டத்தில் வசித்து வந்த விவசாயி தாதாஜி ராமாஜி கோப்ரகடே (வயது 65). 7 பேர் கொண்ட குடும்பத்திற்கு வருவாயை ஈட்டும் ஒரே நபரான இவர் கடந்த 1983ம் ஆண்டு தனது வயலில் விளைந்த 3 நெல் நாற்றுகளை சேமித்து அதில் இருந்து நெல் விதைகளை எடுத்துள்ளார்.
அதனை தொடர்ச்சியாக பயிர் செய்ததில் அதிக விளைச்சல், ருசியான அரிசி ஆகியவை கிடைத்தது. சொர்ண சோனா என்ற பெயரில் விற்கப்பட்ட இந்த நெல் வகை வேளாண்மையில் புரட்சியை ஏற்படுத்தியது. எச்.எம்.டி. கைக்கெடிகாரங்கள் பிரபலம் அடைந்திருந்த நிலையில் இதனை விற்று எச்.எம்.டி. கைக்கெடிகாரம் ஒன்றை வாங்கினார்.
அந்த பெயரே நெல் வகைக்கு சூட்டப்பட்டது. அந்த கைக்கெடிகாரத்தினை அணிந்தபடியே எங்கும் அவர் செல்வார். இவரது கண்டுபிடிப்புகளுக்காக தேசிய கண்டுபிடிப்பாளர் விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3ந்தேதி இவர் மரணம் அடைந்து விட்டார். அவரது வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சென்றுள்ளார்.
இதுபற்றி ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விவசாயி மற்றும் விஞ்ஞானியான தாதாஜி கோப்ரகடே வேளாண்மையில் புரட்சி ஏற்படுத்திய எச்.எம்.டி. நெல் வகையை கண்டுபிடித்தவர். ஆனால் மக்களால் மறக்கப்பட்ட இவர் வறுமையில் உயிரிழந்து உள்ளார்.
நான்டெட்டில் உள்ள அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கவும், அவரது சாதனைகளை நாடு கண்டுகொள்ளாததற்காக மன்னிப்பு கேட்கவும் அவரது வீட்டிற்கு சென்றேன் என தெரிவித்துள்ளார்.