கேரளாவில் வேகமாக பரவுவதால் மக்கள் பீதி: ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் சாவு, மத்தியக்குழு விரைந்தது
கேரளாவில் வேகமாக பரவி வரும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு விரைந்தது.
கோழிக்கோடு,
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கடுமையான காய்ச்சல் தாக்கியதால் கடந்த 15 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அந்த குடும்பத்தலைவரும் அதே நோய்க்காக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைப்போன்ற அறிகுறியுடன் மேலும் பலர் கோழிக்கோடு மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் தாக்கியவர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வந்த லினி என்ற நர்சும் நேற்று காலையில் மரணமடைந்தார்.
இதைப்போல அண்டை மாவட்டமான மலப்புரத்திலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த 2 மாவட்டங்களிலும் இதுவரை 10 பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். ஆனால் 16 பேர் வரை இறந்திருப்பதாக மற்றொரு தகவல் கூறுகிறது. இங்கும் ஏராளமானோர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த காய்ச்சல், தொற்றுநோய் போன்று வேகமாக பரவி வருவதால் நோய் தாக்கியவர்களின் குடும்பத்தினரும், அடுத்தடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். எனவே கேரளா முழுவதும் கடுமையான பீதி நிலவி வருகிறது.
அடுத்தடுத்து நிகழும் இந்த உயிர்ப்பலிகளால் அதிர்ச்சியடைந்த கேரள மருத்துவத்துறை, இந்த நோய் குறித்து ஆய்வு செய்தது. அப்போது ‘நிபா’ எனப்படும் ஒருவித கொடிய வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. எனவே இந்த நோய் தாக்கியவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக புனேக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.
இந்த நோய் தாக்கியவர்கள் மற்றும் அவர்களை பராமரிக்கும் உறவினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய்க்கான சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் தனி வார்டுகளும் உருவாக்கப்பட்டு உள்ளன.
கேரளாவில் முதன் முதலில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நோய் குறித்த தகவல்களை அளிப்பதற்காக மாநிலத்தில் 2 கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில சுகாதார மந்திரி சைலஜா மற்றும் மருத்துவக்குழுவினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவும் மற்றொரு உயிர்க்கொல்லி வைரசான நிபா, முதன் முதலில் மலேசியாவின் கம்பங் சுங்காய் நிபாவில் கடந்த 1998-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. ‘நிபா’ என்ற இடத்தில் கண்டறியப்பட்டதால் அந்த பெயரிலேயே இது அழைக்கப்படுகிறது.
அப்போது பன்றிகள்தான் நோய் பரப்பும் விலங்குகளாக இருந்தன. ஆனால் அதன்பிறகான நிபா வைரஸ் தாக்குதல்களில் எந்த விலங்குகளும் கண்டறியப்படவில்லை. கடந்த 2004-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நோய் தாக்கிய வவ்வால்கள் பருகிவிட்டு சென்ற மிச்ச பதநீரை பருகியதால் பலர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகினர். அதுமுதல் வவ்வால் மூலம் இந்த நோய் பரவுவது உறுதியானது.
கோழிக்கோட்டில் இந்த நோயால் இறந்துபோன ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் வசித்து வந்த வீட்டில் உள்ள கிணற்றில் கூட வவ்வால் ஒன்று இருந்ததை மருத்துவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த கிணறு தொடர்ந்து மூடியே கிடப்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசக்கோளாறு போன்றவைதான் இந்த நோய்க்கான அறிகுறி ஆகும். இந்த வைரஸ் மூளையை தாக்குவதால், மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு ஒரு சில நாட்களிலேயே மரணம் ஏற்படுகிறது.
இந்த நோய்க்கு இன்னும் தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை. நோய் தாக்கியவருக்கு அடிப்படை சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. நோயாளிகளை தொடுதல் போன்ற தொடர்புகள் மூலம் இந்த நோய் பரவுகிறது.
எனவே வவ்வால் கடித்திருக்கலாம் என கருதப்படும் பழங்கள், காய்களை உண்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் இந்த நோய் தாக்கியவர்களை தொடுதல் போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக் கும் பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்தியக்குழு நேற்று கேரளா சென்றது. அங்கு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தை சேர்ந்த வல்லுனர் களை கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ள மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிபா வைரஸ் பாதிப்பை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மாநில சுகாதார மந்திரி சைலஜா உள்ளிட்டோரிடம் நான் பேசியுள்ளேன். இந்த நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என அப்போது நான் உறுதியளித்தேன். இந்த வைரஸ் குறித்த ஆய்வு மற்றும் மாநில அரசுக்கு உதவுவதற்காக மத்தியக்குழு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.