சபரிமலையில் மகர ஜோதி தென்பட்டது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர ஜோதி தென்பட்டது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். #kerala #Sabarimala
சபரிமலை,
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 30-ந் தேதி நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் சுவாமிக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது.
மகர விளக்கு பூஜையின் போது சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி பந்தளம் கொட்டாரத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது.
இதற்காக சுவாமியின் நகைகள் வைத்திருக்கும் பெட்டகங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் நேற்று மதியம் 12 மணி அளவில் சபரிமலை நோக்கி திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது. இதையொட்டி வழிநெடுகிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
இந்த ஊர்வலம் சுவாமி அய்யப்பனின் பாரம்பரிய பெருவழிப் பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக நேற்று மதியம் பம்பையை சென்றடைந்தது.
அங்கிருந்து, திருவாபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.20 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 18-ம் படி வழியாக திருவாபரண பெட்டிகளை சன்னிதானத்துக்கு எடுத்துச் சென்றார்கள். அந்த ஆபரணங்கள் சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த சமயத்தில் தான் பொன்னம்பல மேட்டில் மாலை 6.30 மணியளவில் 3 முறை மகர ஜோதி தென்பட்டது.
பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியாக காட்சி தரும் சாமியை தரிசித்த ஐயப்ப பக்தர்கள் ஐயப்பா... ஐயப்பா.... என்று சரணம் கோஷம் எழுப்பினர்.
மகரஜோதியைக்கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். சபரிமலையில் மகர விளக்கு, மகர ஜோதி தரிசனத்தையொட்டி இதுவரை காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.