பாராளுமன்றத்தில் காஷ்மீர், டோக்லாம், கும்பல் தாக்குதல் விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தீவிரம்
பாராளுமன்றத்தில் காஷ்மீர், டோக்லாம், பசு பாதுகாப்பு கும்பல் தாக்குதல் போன்ற விவகாரங்களை எழுப்பி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடியை கொடுக்க வாய்ப்பு உள்ளது.
புதுடெல்லி,
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்டு இறுதி வரை நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற இருப்பதால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே தொடங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. ஜூலை 17-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இன்று பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்து கட்சிகள் கூட்டம் நடந்தது. அரசியல் கட்சிகள் தரப்பில் முக்கியமான விவகாரங்கள் எழுப்பட்டது.
பிரதமர் மோடி பேசுகையில் பசு பாதுகாப்பு என வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
எதிர்க்கட்சிகள் மழைக்கால கூட்டத்தொடரில், டோக்லாம் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு, மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கை, ஜம்மு காஷ்மீரில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை மற்றும் உள்நாட்டு விவகாரங்களை எழுப்ப வாய்ப்பு உள்ளது.
சந்தைகளில் மாடுகளை விற்பதற்கு தடை விதித்த விவகாரம், பசு பாதுகாப்பு என நடத்தப்படும் கும்பல் தாக்குதல் போன்ற விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மழைக்கால கூட்டத்தொடரில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தையும், அங்கு அரசியல் கட்சி தலைவர்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததற்கும் எதிர்கட்சிகள் தங்கள் கண்டனங்களை தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. ஜிஎஸ்டி, விவசாயம் மற்றும் பாகிஸ்தானை நோக்கிய கொள்கை என்ன என்பது தொடர்பாக காரசார விவாதம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றம், ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், அசாம், டார்ஜிலிங் அமைதியின்மை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவோம் என காங்கிரஸ் கூறிஉள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் தலையீடு தொடர்பாகவும் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என காங்கிரஸ் கூறிஉள்ளது.