நடிகர் திலீப்புடன் வர்த்தக தொடர்பு இல்லை நடிகை பாவனா அறிக்கை

நடிகர் திலீப்புடன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடவில்லை என்றும், எந்த குற்றவாளியும் தப்பிவிடக்கூடாது என்றும் நடிகை பாவனா கூறி உள்ளார்.

Update: 2017-07-13 22:45 GMT

கொச்சி

பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப், கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியார், நடிகை பாவனா ஆகிய மூவரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதாகவும், அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான், பாவனாவை மானபங்கப்படுத்த திலீப் சதித்திட்டம் தீட்டியதாகவும் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில், நடிகை பாவனா, தன்னுடைய சகோதரர் ஜெயதேவ் பாலசந்திராவின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

அன்பான நண்பர்களே..

இந்த அறிக்கையை இப்படி வெளியிடுவதற்கு காரணம் இருக்கிறது.

எனது எண்ணங்களை டி.வி. சேனல் மூலமோ, நிருபர்களின் பேட்டி மூலமோ எடுத்துக் கூறும் மனநிலையில் நான் இல்லை. எனவேதான் இப்படி அறிக்கை வெளியிடுகிறேன்.

கடந்த பிப்ரவரி 17–ந் தேதி முதல், மறக்க முடியாத மற்றும் மிகவும் துரதிருஷ்டவசமான கஷ்டத்தை கடந்து வந்து கொண்டு இருக்கிறேன். மிகவும் நேர்மையான முறையில் இதுகுறித்து நான் போலீசில் புகார் அளித்தேன். அந்த வழக்கு விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வழக்கில் சமீபத்தில் நடந்த சில கைது நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் மற்றவர்களை போல எனக்கும் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளன. எந்த சூழ்நிலையிலும், யாரையும் நான் சந்தேகப்படும் நபர் என்று சுட்டிக்காட்டவில்லை.

அதே போல் யார் மீதும் எனக்கு எந்த தனிப்பட்ட பகையும் கிடையாது. யார் பெயரையும் நான் வெளிப்படுத்தவில்லை. இதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளேன்.

கடந்த காலங்களில் அந்த நடிகருடன் (திலீப்) பல படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்தில் எங்களிடையே தனிப்பட்ட முறையில் சில பிரச்சினைகள் உருவாகின. எனவே, நட்பு உறவில் இருந்து பிரிந்து விட்டோம்.

அந்த நடிகர் கைது குறித்த தகவல்களை, மீடியா மூலமும், நண்பர்கள் வட்டாரங்கள் மூலமும் திரட்டியபோது அவர் தவறு செய்திருக்கிறார் என்பதற்கான போதிய ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளனர் என்பது எங்களுக்கு தெரிய வந்தது.

தான் தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நடிகர் கூறுகிறார். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அவரது குற்றமற்ற தன்மைக்கான தகவல்கள் வெளிவரட்டும். அப்படி இல்லாவிடில், அவரது தவறான செயல்களின் தகவல்கள் வெளியே வரட்டும்.

சட்டத்தின் கண்கள் முன்பு அனைவரும் சமம்தான். குற்றம் இழைக்காத ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது. அதுபோல், எந்த ஒரு குற்றவாளியும் தப்பிவிடக்கூடாது. நான் அந்த நடிகருடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதாகவும், பிற முதலீடுகள் செய்ததாகவும் தகவல் வெளியாகி வருகிறது

அது தவறான தகவல். எங்களிடையே அதுபோன்ற தொடர்புகள் இல்லை. முதலில் இந்த தகவல் வெளியானபோது, சிறிதளவு கூட உண்மை இல்லாத அந்த தகவல் விரைவில் மறைந்து விடும் என்றே நினைத்தேன். ஆனால், வர்த்தக தொடர்புகள் குறித்த தகவல் மீண்டும், மீண்டும் ஊடகங்களில் வெளிவருவதால், இந்த விளக்கத்தை கொடுக்க விரும்பினேன்.

தேவைப்பட்டால், விசாரணை அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளேன். அதேபோல், இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு, போலீசாருக்கு நான் நன்றி தெரிவிப்பது போல சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோ போலியானது என்பதை கூற இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறேன். இதுபோன்ற செயல்கள் மக்கள் மற்றும் மீடியாவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.

அனைவரும் இந்த நாட்டின் சட்டத்தின் கீழ்தான் இருக்கிறோம். குற்றம் இழைக்காத ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது, எந்த ஒரு குற்றவாளியும் தப்பிவிடக்கூடாது என்று நான் மீண்டும் கூறுகிறேன்.

உங்களின் அளவிடமுடியாத அன்பு மற்றும் ஆதரவுக்கு ஏராளமான பிரார்த்தனைகளுடன் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு நடிகை பாவனா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்