குற்றவழக்கில் சிக்கிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தடை; பின்வாங்கும் தேர்தல் ஆணையத்தை கடிந்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க விரும்பவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
தற்போது குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும் என்று கோரி பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான அஸ்வின் குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி நிர்ணயிக்கவேண்டும் என்றும், இதேபோல் எத்தனை வயது வரை தேர்தலில் போட்டியிடலாம் என்ற வரையறையை உருவாக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் கருத்துக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் மனு தாக்கல் செய்து இருந்தது.
மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது சாத்தியம் இல்லாதது என்றும், எனவே வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், குற்றவாளிகள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கவேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஆதரிப்பதாகவும், ஆனால் குற்றவழக்கில் தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்க விரும்பவில்லை என்றும் கூறினார். குற்றவாளிகள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க சில விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தேர்தல் கமிஷன் வக்கீலிடம் சரமாரியாக சில கேள்விகளை எழுப்பினார்கள். ‘‘குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கவேண்டும் என்று கோரி இந்திய குடிமகன் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் அமைதியாக இருக்கக்கூடாது. அவருடைய கோரிக்கைக்கு ஆதரவு உண்டா? இல்லையா? என்பதை தேர்தல் கமிஷன் தெளிவாக கூற வேண்டும்’’ என்று கூறினார்கள்.
அதற்கு தேர்தல் கமிஷன் வக்கீல், அரசியலில் குற்றவாளிகள் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் ஆதரிப்பதாக கூறினார். உடனே நீதிபதிகள், ‘‘தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கவேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் ஆதரிக்கிறதா? என்பது பற்றி நீங்கள் தெளிவாக சொல்லுங்கள்’’ என்றனர்.
அதற்கு அவர், இந்த பிரச்சினை தொடர்பாக தேர்தல் கமிஷன் சார்பில் கூடுதல் பிரமாணம் தாக்கல் செய்யப்படும் என்று பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை வருகிற 19–ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று தேர்தல் கமிஷன் தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.