அமர்நாத் பக்தர்கள் மீதான தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு தொடர்பு
அமர்நாத் பக்தர்கள் மீதான தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பஸ்சில் சென்ற பக்தர்கள் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் என தற்போது தெரியவந்து உள்ளது. இச்சம்பவத்துக்கு லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் காரணம் என்று காஷ்மீர் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிஇது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி இஸ்மாயில் என தற்போது தெரியவந்து இருக்கிறது. இந்த தாக்குதலில் 5 அல்லது 6 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ராணுவ வீரர்களை குறிவைத்து தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததால் தப்பி சென்ற போது பக்தர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதல் பக்தர்களை குறிவைத்து நடத்தப்பட்டது அல்ல. தப்பி சென்ற பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர்.
ஆனால் இந்த சம்பவத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று லஷ்கர் இ தொய்பா இயக்கம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
ராஜ்நாத் சிங் ஆலோசனைஇதனிடையே காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் மீதான தாக்குதல் குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அமர்நாத் பக்தர்கள் அச்சம் இன்றி தங்கள் பயணத்தை தொடர பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். வரும் காலத்தில் இது போன்ற எந்த சம்பவமும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பலத்த பாதுகாப்புஆலோசனை கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் எடுத்த முடிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பேசினார். மேலும் மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் அஹிர் மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய அனந்தநாக் மாவட்டத்துக்கு உடனடியாக புறப்பட்டனர்.
தற்போது அமர்நாத் பக்தர்களின் பாதுகாப்புக்கு 21 ஆயிரம் துணை ராணுவ படை வீரர்களுடன், காஷ்மீர் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டை விட 9 ஆயிரத்து 500 ராணுவ வீரர்கள் இந்த ஆண்டு கூடுதலாக வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ளும் வழியில் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
பஸ் டிரைவருக்கு பாராட்டுஅமர்நாத் குகை கோவிலை தரிசித்து விட்டு திரும்பிய குஜராத் மாநிலத்தை சேர்ந்த பஸ்சில் 51 பேர் இருந்தனர். பயங்கரவாதிகள் அந்த பஸ் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி போதும் டிரைவர் ஷேக் சலீம் பஸ்சை நேராக 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராணுவ முகாமில் கொண்டு போய் சேர்த்தார். இதனால் பஸ்சில் இருந்த பல பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பஸ் டிரைவரின் இந்த துணிச்சலான பணியை பஸ்சில் வந்த பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். மேலும் காஷ்மீர் முதல்–மந்திரி மெகபூபா முப்தி, கவர்னர் என்.என்.வோரா, குஜராத் முதல்–மந்திரி விஜய் ரூபானி உள்ளிட்டோரும் பஸ் டிரைவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
நிவாரண உதவிபயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்த 7 பக்தர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.6 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக காஷ்மீர் மாநில அரசு அறிவித்து உள்ளது. தாக்குதலின் போது பெரும் உயிர் சேதத்தை தவிர்த்த டிரைவருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.
இதேபோல் அமர்நாத் கோவில் வாரியம் சார்பாக, இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1½ லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரமும் வழங்கப்படும் என கவர்னர் என்.என்.வோரா அறிவித்தார். மேலும் தாக்குதலுக்கு ஆளான பஸ் டிரைவருக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது.
உயிர் இழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண உதவியாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
மீண்டும் பயணம்பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் நடந்த போதிலும் பக்தர்கள் நேற்று மீண்டும் தங்கள் புனித பயணத்தை தொடர்ந்தனர். 756 பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 289 பக்தர்கள் யாத்திரை முகாமில் இருந்து அமர்நாத் குகைக்கோவிலுக்கு வாகனங்களில் நேற்று புறப்பட்டனர். அவர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே தாக்குதலில் காயம் அடைந்த சிலர் குஜராத்துக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தங்கள் சொந்த ஊரில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.