அமர்நாத் யாத்திரை தாக்குதல் ‘காஷ்மீர் மக்கள் அனைவருக்கும் அவமானம்’ மெகபூபா கண்டனம்
அமர்நாத் யாத்திரை தாக்குதலால் காஷ்மீர் மக்கள் அனைவரும் அவமானத்தால் தலை குணிந்து உள்ளனர் என மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
அமர்நாத் யாத்திரை தாக்குதலால் காஷ்மீர் மக்கள் அனைவரும் அவமானத்தால் தலை குணிந்து உள்ளனர் என மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பதான்கு என்ற இடத்தில் அமர்நாத் சென்று பனி லிங்கத்தை தரிசித்து விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டு இருந்த பக்தர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 19 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் காஷ்மீர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி இந்த பயங்கர தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
15 ஆண்டுகளுக்கு பின்னர் பயங்கரவாதிகளால் அமர்நாத் யாத்திரை குழுவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அரசியல் கட்சி தலைவர்கள், காஷ்மீர் முதல்–மந்திரி மெகபூபா முப்தி ஆகியோரும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலால் அனைத்து இஸ்லாமியர்கள் மற்றும் காஷ்மீரிகள் மீது கறைபடிந்து உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
அனந்த்நாக்கில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பக்தர்களை சந்தித்து ஆறுதல் கூறிய மெகபூபா முப்தி, இன்றைய தாக்குதலால் காஷ்மீர் மக்கள் அனைவரும் அவமானத்தால் தலை குணிந்து உள்ளனர் என்றார்.
“பலவிதமான கஷ்டங்கள் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு வருகிறார்கள் காஷ்மீருக்கு. இன்று 7 பக்தர்கள் உயிரிழந்து உள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்க என்னிடம் வார்த்தை கிடையாது. விரைவில் குற்றவாளிகளை பாதுகாப்பு படைகள் கைது செய்யும் என நான் நம்புகின்றேன். குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் அனைத்து இஸ்லாமியர்கள் மற்றும் காஷ்மீரிகள் மீது கறையை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தும் வரையில் நாம் அமைதியாக இருக்க முடியாது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் மெகபூபா முப்தி.