உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் மீது திராவகம் வீச்சு 5–வது முறையாக தாக்குதலுக்கு உள்ளானார்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகேயுள்ள உன்சாஹர் என்ற கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவரை சொத்து தகராறில் 2009–ம் ஆண்டு, 2 பேர் வீடு புகுந்து கற்பழித்தனர். அவர் முகத்தில் திராவகத்தையும் வீசினர்.

Update: 2017-07-02 22:45 GMT

லக்னோ,

கடந்த மார்ச் மாதம் 23–ந்தேதி அலகாபாத்தில் இருந்து அவர் லக்னோவுக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தபோது 2 நபர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக திராவகத்தை குடிக்க வைத்தனர். மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத், அந்த பெண்ணை ஆஸ்பத்திரியில் சந்தித்து நேரில் ஆறுதல் கூறியதுடன் உதவித் தொகையாக ரூ.1 லட்சமும் வழங்கினார்.

இந்தநிலையில் அந்த பெண், திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக லக்னோ நகரின் அலிகஞ்ச் பகுதியில் நடத்தப்பட்டு வரும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். நேற்றுமுன்தினம் இரவு அவர் விடுதியை விட்டு வெளியே வந்தபோது அவர் மீது மீண்டும் திராவகம் வீசப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு, முகம், கழுத்து ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்த போலீசார், காயம் அடைந்த பெண் புகார் அளித்ததும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்படும் என்றனர்.

ஏற்கனவே இதே பெண் சொத்து தகராறில் 2012–ல் கத்தியால் குத்தப்பட்டார். பின்பு 2013–ம் ஆண்டு அவர் மீது மீண்டும் திராவகம் வீசப்பட்டது.

இப்படி 5 முறை ஒரே பெண் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்