காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; பெண் படுகாயம்
காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பிம்பர் காலி செக்டார் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலை தொடுத்தனர்.
ஜம்மு,
காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பிம்பர் காலி செக்டார் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய தாக்குதலை தொடுத்தனர்.
அதிகாலை 4.15 மணியளவில் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களை கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து நமது வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தக்கபதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடைய நீண்ட நேரம் சண்டை நடந்தது.
பாஸ்னி என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வீசிய பீரங்கி குண்டு வெடித்ததில் அங்கு உள்ள ஒரு வீட்டில் இருந்த 35–வயது பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவநிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேரும், சிவிலியன் ஒருவரும் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.