ஆணவம் பிடித்த மோடி அரசிற்கு மூன்றாண்டுகளில் கொண்டாட ஏதுமில்லை - காங்கிரஸ்
மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ஆனந்த் ஷர்மா ஆணவம் பிடித்த மோடி அரசிற்கு மூன்றாண்டுகளில் கொண்டாட ஏதுமில்லை என்றார்.
சிம்லா
அரசு தான் கூறிக்கொள்வது போல் வளர்ச்சியில் சாதனைகளில் எதையும் சாதிக்கவில்லை; மாறாக அதிகாரப் போதையிலும், இறுமாப்பிலும் மூழ்கியுள்ளது என்றார் ஷர்மா.
“வளர்ச்சி விகிதங்களில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு வளர்ச்சியில் மோசமான செயல்பாடு, எதிர்மறையான மூலதன திரட்டு, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாதவகையில் நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்தது என பொருளாதார விவகாரங்களில் அரசு தோல்வியுற்றுள்ளது” என்றார் ஷர்மா.
அரசு பழைய, புதிய அளவுகோல்களை அடிப்படையாக கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாட்டு வருமான வளர்ச்சியை அளந்து வெள்ளை அறிக்கையை வழங்க வேண்டும்; இதைக் கொண்டு பொதுமக்கள் உண்மையை அறிய முடியும் என்று அவர் கூறினார்.
அண்டை நாடுகளுடனான உறவு வீழ்ச்சியடைந்த சூழல் அயலுறவுக் கொள்கையின் பலன்கள் கண்களுக்கு புலனாகவில்லை. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் பதற்றத்தைக் தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் ஆனந்த் ஷர்மா.
“உள்நாட்டு பாதுகாப்பு சூழல் நல்ல நிலையில் இல்லை; தீவிரவாதிகள், இதரர்களின் தாக்குதலால் இந்தியா முழுதும் 238 சிப்பாய்களும், அதிகாரிகளும் தங்கள் உயிரை இழந்துள்ளனர். தீவிரவாத தாக்குதல் நடக்கும் வாய்ப்பு நாட்டில் அதிகரித்துள்ளது” என்றும் அவர் கூறினார்.
விவசாயிகளின் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. அது நாடு முழுதும் பரவியும் வருகிறது. ”அரசு வீணாக பொது மக்கள் பணத்தை மூன்றாண்டு கால ஆட்சி கொண்டாட்டங்களுக்கு செலவழிக்காமல், அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தி, விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க வழி காண வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
மகாத்மா காந்தி தொடர்பாக அமித் ஷா கூறிய கருத்திற்கு பதிலளித்த அவர், தேசத் தந்தைக்கு இழைக்கப்பட்ட இழுக்கு என்றார். பாஜக, ஆர் எஸ் எஸ்சுக்கு மகாத்மா மீது மரியாதையில்லை என்றார் அவர்.
வங்காள தேசத்தை உருவாக்க மிகப் பெரிய சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி, 90,000 பாகிஸ்தான் வீரர்களை சிறைபிடித்த இந்திராவின் நூற்றாண்டை கொண்டாடாத அரசை கடிந்து கொண்டார் அவர். காங்கிரஸ் கட்சிக்கு வகுப்புவாத, பிளவுவாத சக்திகளை எதிர்த்து சண்டையிடும் தனது வரலாற்று பொறுப்பு பற்றி தெரியும் என்றும், அந்த எதிர்ப்பு மூலம் இந்தியாவை ஒற்றுமையாக, ஜனநாயக, மதச்சார்பற்றதாக வைத்திருக்கவும் தெரியும் என்று அவர் தெரிவித்தார்.