ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் மேலும் 2 பெண்கள் சாவு

ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

Update: 2022-11-05 20:37 GMT

பீதர்:- 

பீதர் மாவட்டம் சிடகுப்பா தாலுகா பெமலிகோட்டா பகுதியில் பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோவும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 5 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும், 6 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெமலிகோட்டா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் பீதர் மாவட்டம் பிடமனல்லி கிராமத்தை சேர்ந்த ருக்மணி, ஜக்கம்மா, குந்தம்மா, யாதம்மா, பிரபா ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்கள் ஆட்டோவில் சென்றபோது, எதிரே வந்த லாரி அதிவேகமாக வந்து மோதி விபத்து ஏற்படுத்தியதும் தெரிந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வரம்மா(வயது 55) மற்றும் பார்வதி(40) ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து பெமலிகோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்