நிபா வைரசுக்கு இருவர் உயிரிழப்பு.! கேரளாவுக்கு விரைந்த மத்திய குழு
கேரளாவில் நிபா வைரசுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.
கோழிக்கோடு,
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, நிலைமையை ஆய்வு செய்யவும், நிபா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசுக்கு உதவவும் ஒரு மத்திய குழு கேரளாவுக்கு அனுப்பப்பட்டது என்று மன்சுக் மாண்டவியா கூறினார். வைரஸ் தாக்குதலால் முதல் மரணம் ஆகஸ்ட் 30 ஆம் தேதியும், இரண்டாவது மரணம் திங்களன்றும் நடந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் சிகிச்சையில் இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார்.