ஆந்திரா: விஷ வாயு தாக்கி பள்ளி மாணவ, மாணவிகள் மயக்கம்
ஆந்திராவில் விஷ வாயு தாக்கியதில் பள்ளியில் பாடம் கவனித்து கொண்டிருந்த மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், காக்கிநாடா, சர்பாபுரம் மண்டலம் வலசப்பாக்கம் பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் அருகே ரசாயன தொழிற்சாலை மற்றும் ஆயில் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையின் மூலம் விஷவாயு அப்பகுதியில் பரவியது. இதனால் 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு மூச்சுத் திணருவதாக கூறும் போது மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
இதே போல் அருகருகே உள்ள 6,7,8-ம் வகுப்பில் இருந்த 18 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக வகுப்பறையில் இருந்த மற்ற மாணவ,மாணவிகளை வெளியேற்றி பள்ளி மைதானத்தில் அமர வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் மற்றும் ஆம்புலன்சிற்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மயக்கமடைந்த மாணவ மாணவிகளை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளியில் மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்த தகவல் அவரது பெற்றவர்களுக்கு தெரிய வந்தது. தங்களது பிள்ளைகளுக்கு என்ன ஆனதோ என்ற பயத்தில் அலறி அடித்துக் கொண்டு பள்ளியை நோக்கி படையெடுத்தனர்.
ஒரே நேரத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பாக குவிந்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
விஷவாயு தாக்கியது குறித்து போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.