பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் 114 'நம்ம கிளினிக்'குகள் தொடக்கம்

கர்நாடகத்தில் ஒரே நாளில் 114 நம்ம கிளினிக்குகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-14 18:45 GMT

பெங்களூரு:

நம்ம கிளினிக்குகள்

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் 'நம்ம கிளினிக்'குகள் அதாவது மருத்துவ மையங்கள் தொடங்கப்படும் என்று நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநிலத்தில் 447 நம்ம கிளினிக்குகள் தொடங்குவதற்கான பணிகளை சுகாதாரத்துறை மேற்கொண்டது. இதற்காக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ ஊரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் முதல் கட்டமாக மாநிலத்தில் 114 நம்ம கிளினிக்குகள் 14-ந் தேதி (நேற்று) தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் அறிவித்தார். அதன்படி கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் ஒரே நாளில் 114 நம்ம கிளினிக்குகள் தொடக்க விழா தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திாி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, நம்ம கிளினிக்குகளை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-

உடல் ஆரோக்கியம்

கர்நாடகத்தில் சுகாதாரத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகரங்களில் வசிக்கும் ஏழை-நடுத்தர மக்களின் உடல் ஆரோக்கியம் முக்கியமானது. அந்த மக்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றால் அதற்கு அதிகளவில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் அந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏழ்மை, நோய்கள் இவை இரண்டும் வளர்ச்சியின் எதிரிகள் ஆகும். ஏழ்மையால் குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. எந்த பேதமும் இன்றி அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் ஆகும். பின்தங்கிய, வளர்ச்சியை எதிர்நோக்கும் தாலுகாக்களை அடையாளம் கண்டு கல்வி, சுகாதாரம், சேவை, உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சமுதாய மையங்கள்

100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமுதாய மையங்களாக தரம் உயர்த்தப்படுகிறது. கல்யாண-கர்நாடக பகுதியில் புதிதாக 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படும். ரத்த மறுசுழற்சி செய்யப்படும் எண்ணிக்கை 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. புற்றுநோய்களின் வசதிக்காக மாநிலத்தில் 12 இடங்களில் 'ஹீமோதெரபி' சிகிச்சை மையங்கள் திறக்கப்படுகின்றன.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை, இலவச மூக்கு கண்ணாடி வழங்குவது, ரூ.500 கோடியில் காது கேளாதோருக்கு நவீன கருவிகள் வழங்குவது, விவசாயிகளுக்கு யசஸ்வினி மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்துவது போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறோம். உப்பள்ளியில் ரூ.350 கோடி செலவில் ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி தொடங்கப்பட உள்ளது.

மருத்துவ உபகரணங்கள்

நவநகர் புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு நவீன மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழைகள், சாமானிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை கிடைக்க புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். செயற்கை சுவாச கருவி உள்ளிட்ட உயர்தரமான சிகிச்சைகள் ஏழைகளுக்கும் எளிதில் கிடைக்க வேண்டும்.

கர்நாடகத்தில் 1,250 மலிவு விலை மருந்து கடைகள் உள்ளன. நாட்டிலேயே கர்நாடகத்தில் 2-வது இடத்தில் உள்ளது. வருகிற ஆண்டில் புதிதாக ஆயிரம் மருந்து கடைகளை திறக்க இருக்கிறோம். நம்ம கிளினிக்குகளில் தொலைதூர மருத்துவ சிகிச்சை முறை அமல்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் உடல் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து சுகாதாரத்துறையில் ஆவணங்களை பராமரிக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக கர்நாடகத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இந்த விழாவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சார், பொதுப்பணி மந்திரி சி.சி.பட்டீல், முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எந்தெந்த நகரங்களில் நம்ம கிளினிக்குகள்

கர்நாடகத்தில் 447 நம்ம கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. அதில் முதல்கட்டமாக நேற்று 114 கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் 243, பாகல்கோட்டையில் 18, பல்லாரியில் 11, விஜயநகரில் 6, பெலகாவியில் 21, பெங்களூரு புறநகரில் 9, பீதரில் 6, சாம்ராஜ்நகரில் 3, சிக்பள்ளாப்பூரில் 3, சிக்கமகளூருவில் 4, சித்ரதுர்காவில் 1, தட்சிண கன்னடாவில் 12, தாவணகெரேயில் 1, தார்வாரில் 6, கதக்கில் 11, ஹாசனில் 5, ஹாவோியில் 5, கலபுரகியில் 11, குடகில் 1, கோலாரில் 3, கொப்பலில் 3, மண்டியாவில் 4, மைசூருவில் 6, ராய்ச்சூரில் 8, ராமநகரில் 3, துமகூருவில் 10, உடுப்பியில் 10, உத்தரகன்னடாவில் 10, விஜயாப்புராவில் 10, யாதகிரியில் 3 கிளினிக்குகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன சிகிச்சைகள் கிடைக்கும்?

நம்ம கிளினிக்குகளில் ஒரு டாக்டர், நர்சு, ஆய்வக டெக்னீசியன், டி பிாிவு ஊழியர் ஒருவர் இருப்பார். இந்த கிளினிக்குகளில் 12 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு உடல் பரிசோதனை, குழந்தை பிறந்த பிறகு வழக்கமாக வழங்கப்படும் சிகிச்சைகள், குழந்தைகள், பெரியவர்களுக்கு வழக்கமான நோய் சிகிச்சைகள், பொது தடுப்பூசிகள் வழங்குதல், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை, கருத்தடை, தொற்று நோய் நிர்வாகம், பொதுவான நோய்களுக்கு சிகிச்சை, சர்க்கரை, ரத்த அழுத்த நிர்வாகம், நீண்டகால நோய்கள், வாய் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அங்கு போதிய வசதிகள் இல்லாவிட்டால் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் பரிந்துரை செய்யப்படுவார்கள். கண் பரிசோதனையும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்