பணியாளர் மனநலனுக்காக 11 நாள் தொடர் விடுமுறை: இ-வர்த்தக நிறுவனம் அறிவிப்பு
ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று பணியாளர்களின் மனநலனை கவனத்தில் கொண்டு 11 நாட்கள் தொடர் விடுமுறையை அறிவித்து உள்ளது.;
புதுடெல்லி,
நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலமுடன் இருப்பது, அவர்களுக்கு மட்டுமின்றி உடன் பணியாற்றுவோருக்கும் பயன் விளைவிப்பதுடன், நிறுவனத்திற்கும் லாபம் ஏற்படுத்தும் என்ற நோக்கில் ஒரு சில நிறுவனங்கள் பணியாளர்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.
இதன்படி, ஊழியர்களுக்கு கூடுதலாக ஊக்க தொகை, பரிசு போன்றவற்றை வழங்குதல், சுற்றுலா செல்ல வழிவகை செய்தல் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தும்.
இந்த சூழலில், மின்னணு வர்த்தக தளங்களில் ஒன்றான மீஷோ என்ற நிறுவனம் தனது பணியாளர்களின் மனநலன் சார்ந்த விசயங்களை மனதில் கொண்டு நிறுவனம் முழுமைக்கும் 11 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து, 2-வது ஆண்டாக அறிவித்து உள்ளது.
இதனால், பரபரப்பு நிறைந்த பண்டிகைக்கால விற்பனை நிறைவை எட்டியதும், நிறுவன பணியாளர்கள் அனைவரும், தங்களது பணியில் இருந்து முழுவதும் விடுபட்டு, மனநலன் சார்ந்த விசயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் நிறுவனரான சஞ்சீவ் பார்ன்வால் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தொடர்ந்து 2-வது ஆண்டாக நிறுவனம் முழுவதும் 11 நாட்கள் விடுமுறையை நாங்கள் அறிவித்து உள்ளோம்.
வரவிருக்கிற பண்டிகைக்காலம் மற்றும் பணி சார்ந்த வாழ்க்கையில், சமநிலையின் முக்கியத்துவம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, எங்களது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வருகிற அக்டோபர் 22-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை தங்களை சரி செய்து கொள்வதற்கும், புதுப்பித்து கொள்வதற்கும் வேண்டிய தேவையான விடுமுறையை எடுத்து கொள்வார்கள் என்று தெரிவித்து உள்ளார்.
இதற்கு முன்பு அந்நிறுவனம், எல்லையில்லாத அளவில் பணி செய்யும் வகையிலான மாதிரியை அறிவித்ததுடன், காலவரையற்ற உடல்நல விடுமுறை, பாலின நடுநிலைமையுடன் பெற்றோருக்கான 30 வாரங்கள் வரை விடுமுறை மற்றும் 30 நாட்கள் வரை பாலின மாற்றத்திற்கான சிகிச்சைக்கு தேவையான விடுமுறை ஆகியவற்றை வழங்கி அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.