ஒடிசா முதல்-மந்திரியுடன் 5 நாட்களில் 1 லட்சம் பேர் சந்திப்பு
ஒடிசாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகள், அடுத்த 50 ஆண்டுகளுக்கு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று முதல்-மந்திரி மோகன் சரண் கூறியுள்ளார்.
புவனேஸ்வர்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட ஒடிசா சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 147 இடங்களில் 78 இடங்களை கைப்பற்றி, பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, பா.ஜ.க.வை சேர்ந்த மோகன் சரண் மஜி, முதல்-மந்திரியாக கடந்த 12-ந்தேதி பொறுப்பேற்று கொண்டார்.
ஒடிசா முதல்-மந்திரியாக மோகன் சரண் பதவியேற்று கொண்ட நாளில் இருந்து 5 நாட்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து, 1 லட்சம் பேர் அவரை சந்தித்து உள்ளனர் என முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
அவருடைய தற்காலிக அலுவலகத்தில், தனிநபர்கள், அமைப்புகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நேற்று மதியம் அவரை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மோகன் சரண், கடவுள் ஜெகந்நாதர் மற்றும் ஒடிசாவின் 4.5 கோடி மக்களின் ஆசியால், மக்களுக்கு சேவையாற்ற மற்றும் ஒடிசாவின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டு உள்ளது.
என்னை சந்திப்பதற்காக, காலை 6 மணியில் இருந்து மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்களை மாலை 3 மணிக்கு சந்திக்கவே என்னுடைய நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது என கூறினார்.
பொதுமக்களின் ஒத்துழைப்புடன், அடுத்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும். அது அடுத்த 50 ஆண்டுகளுக்கு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று உறுதியாக கூறினார்.