மராட்டியத்தில் வங்கியில் இருந்து ரூ.49 லட்சம் கொள்ளை
மராட்டிய மாநிலம் லத்தூரில் உள்ள வங்கியில் ரூ.27 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.22 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
லத்தூர்,
மராட்டிய மாநிலம் லத்தூரில் உள்ள வங்கியில் ரூ.27 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.22 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் நேற்று தெரிவித்தனர். லத்தூரில் உள்ள பஞ்சாயத்து கட்டிடத்தில் உள்ள மகாராஷ்டிரா கிராமின் வங்கியில் இந்த கொள்ளை நடந்துள்ளது.
இதுகுறித்து ஷிரூர் ஆனந்த்பால் இன்ஸ்பெக்டர் ராமேஷ்வர் தத் கூறும்போது, "வழக்கு பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது, ரூ.27 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.22 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. வங்கியில் கொள்ளையின் மதிப்பீடு நடந்து வருகிறது" என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து கிளை மேலாளர் சவுரப் கைரே கூறும்போது, "இந்த வங்கியில் 14 கிராமங்களைச் சேர்ந்தவர்களின் கணக்குகள் உள்ளன. காலை 10 மணியளவில் வங்கியின் பிரதான கதவு சேதமடைந்து, பிரதான லாக்கர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட மக்கள் திருட்டு போனதைக் கவனித்தனர். முதல்கட்ட மதிப்பீட்டின்படி ரூ.27 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.22 லட்சம் மதிப்பிலான நகைகள் என மொத்தம் ரூ.49 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.
மெயின் லாக்கரில் ஐந்து வகையான பூட்டுகள் உள்ளன. லாக்கர் தொழில்முறையாகவும், நுணுக்கமாகவும் உடைக்கப்பட்டுள்ளது. ஷிரூர் அனந்த்பால் பஞ்சாயத்து கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஜன்னல்களில் கம்பிகள் இல்லாததால், கொள்ளையர்களுக்கு கொள்ளையடிப்பது எளிதாக இருந்திருக்கலாம் என்று மற்றொரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.