காலாண்டு தேர்வுக்கு சரியாக படிக்காததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
காலாண்டு தேர்வுக்கு சரியாக படிக்காததால் விரக்தி அடைந்த பிளஸ்-2 மாணவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது 17). இவருடைய தந்தை இறந்து விட்டார். தாய் மற்றும் சகோதரர்களுடன் வசித்து வந்தார். சந்தோஷ்குமார், சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளியில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று கணித தேர்வு நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார் வீட்டில் தனியாக படித்து வந்தார். அவர், தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை என்ற மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
தேர்வு பயத்தில் இருந்த சந்தோஷ்குமார், நள்ளிரவில் வீட்டில் உள்ள அறையில் தனது பள்ளி சீருடைக்கு அணியும் பெல்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நேற்று காலை எழுந்து பார்த்த அவரது தாய் மற்றும் சகோதரர்கள் சந்தோஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சேலையூர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.