சித்ரா பவுர்ணமியையொட்டி வள்ளல் அதியமான், அவ்வையார் சிலைகளுக்கு கலெக்டர் மரியாதை

சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி தர்மபுரி அதியமான்கோட்டத்தில் வள்ளல் அதியமான், அவ்வையார் சிலைகளுக்கு கலெக்டர் கார்த்திகா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2021-04-27 03:07 GMT
தர்மபுரி,

பழங்காலத்தில் தகடூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் தமிழ்மொழியை வளர்ப்பதற்காக அவ்வைக்கு அரிய நெல்லிக்கனியை தந்து பெரும்புகழ் பெற்றார். வள்ளல் அதியமானின் சிறப்பை போற்றும் வகையில் தமிழக அரசின் சார்பில் தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் அதியமான் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினம் வள்ளல் அதியமானுக்கு பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இதன்படி தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அதியமான் கோட்டத்தில் நேற்று வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கலெக்டர் மரியாதை

இந்த விழாவில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள வள்ளல் அதியமான், அவ்வையார் ஆகியோரின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வடிவேல், தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, ரவி ஆகியோர் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்