காஞ்சீபுரத்தில் கொரோனா பாதிப்பால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி

காஞ்சீபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி, கொரோனா தொற்றால் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2020-07-16 02:41 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டை அம்பாள் நகரைச் சேர்ந்தவர் பழனி (வயது 53). இவர், 1988-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.

தற்போது காஞ்சீபுரத்தில் உள்ள நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனாவுக்கு உயிரிழந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிக்கு, தனலட்சுமி என்ற மனைவியும், ஹரிபிரசாத் (27) என்ற மகனும், லோகேஸ்வரி (25) என்ற மகளும் உள்ளனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி உயிரிழந்த தகவல் கேள்விபட்டதும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, பாலுச்செட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், தனிபிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்