குமரி மாவட்டத்தில் சூழலியல் மண்டலத்தில் ஜீரோ கி.மீட்டராக எல்லை நிர்ணயம்; விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தில் ஜீரோ கிலோ மீட்டராக எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தமிழக அரசுக்கு அவர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில்,
தமிழகத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக வரையறை செய்யப்பட தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும், மாவட்ட வனத்துறையும் இணைந்து வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளூர் பொதுமக்கள், மலையடிவாரம், காடுகளில் ஓரங்களிலும் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்துகள், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு எல்லை நிர்ணயம் செய்யப்படும் போது குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், தனியார் பட்டா விவசாய நிலங்கள் பாதிக்கப்படாதவாறு ஜீரோ கிலோ மீட்டராக எல்லையை நிர்ணயம் செய்து மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் சதுர கிலோ மீட்டருக்கு 1,100 பேர் என நெருக்கமாக வாழ்கிறார்கள். இந்தநிலையில் மலை சார்ந்த பகுதியில் தனியார் பட்டா நிலங்களில் உள்ள தேக்கு, அல்பீசியா போன்ற மரங்களும் வெட்டி பயன்பாட்டுக்கு கொண்டு செல்லவும் வனத்துறை சட்டங்கள் மிக கடுமையாக உள்ளன. இதனால், ஏழை விவசாயிகள் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும், தனியார் பட்டா நிலங்களில் தங்கள் முன்னோர் நட்டு வளர்த்து பராமரித்த பின்பு முதிர்ந்த மரங்களை வெட்ட சூழலியல் பாதுகாப்பு மண்டலம், தனியார் பாதுகாப்பு சட்டங்கள் பெரும் தடையாக உள்ளன.
இதனால், குமரி மாவட்டத்தில் எனது தொகுதியான விளவங்கோடு பகுதியில் களியல், கடையால், ஆறுகாணி, பத்துகாணி, ஒரு நூறாம் வயல், அணைமுகம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, ஏழைகள் பயன்பெறும் வகையில் தனியார் பட்டா நிலத்தில் உள்ள மரங்களை வெட்டி கொண்டு செல்ல போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.