சுருக்குமடி வலை பயன்படுத்த மறுப்பு தெரிவித்தால் குடும்பத்துடன் கடலில் இறங்கி தற்கொலை போராட்டம்
சுருக்குமடி வலை பயன்படுத்த மறுப்பு தெரிவித்தால் வருகிற 17-ந் தேதி மீனவர்கள் குடும்பத்துடன் கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் நடத்துவது என 21 மீனவ கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சீர்காழி,
தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கக்கூடாது என அதிகாரிகள் மீனவர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி ஒரு தரப்பு மீனவர்களும், சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என கூறி மற்றொரு தரப்பு மீனவர்களும் கடந்த 11-ந் தேதி முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், காரைக்கால் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 21 மீனவ கிராமங்கள் சார்பில் சுருக்குமடி வலைக்கு ஆதரவாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருமுல்லைவாசல் மீனவ கிராம பஞ்சாயத்தார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சிறு தொழில் மீனவர்களை பாதிக்காத வகையில் காலை 6 மணிக்கு மேல் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது. கரை பகுதியில் சுருக்குமடி வலையை கொண்டு மீன்பிடிக்கக்கூடாது. சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடித்துவரும் மீன்களை, சிறு தொழில் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை விற்ற பிறகு காலை 10 மணிக்கு மேல் விற்பனை செய்ய வேண்டும்.
சுருக்குமடி வலையை கொண்டு மீன்பிடி தடைக்காலத்துக்கு முன்பு 2 மாதம், மீன்பிடி தடைக்காலத்துக்கு பின்பு 3 மாதமும் என 5 மாதங்கள் தொழிலில் ஈடுபடுவது. இதுபோன்ற விதிமுறைகளை மீறி சுருக்குமடி வலையை கொண்டு பிடித்துவரும் மீன்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட ஊர் பொது நிதிக்காக பயன்படுத்துவது. சம்பந்தப்பட்ட விசைப்படகை குறைந்தபட்சம் 10 நாட்கள் தொழில் செய்ய அனுமதி மறுப்பது.
கடந்த 11-ந் தேதி முதல் சுருக்குமடி வலைக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) அரசு நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறி உள்ளது. இதில் சுருக்குமடி வலை பயன்படுத்த மறுப்பு தெரிவித்தாலும், வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டாலும் வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பழையார் முதல் கோடியக்கரை வரை உள்ள மீனவர்கள் அந்தந்த மீனவ கிராமங்களில் குடும்பத்துடன் கடலில் இறங்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திருமுல்லைவாசல், நம்பியார் நகர், நாகை ஆரிய நாட்டுத்தெரு, செருதூர், சாமந்தான்பேட்டை, நாகூர், காரைக்கால்மேடு, காளிக்குப்பம், மண்டபத்தூர், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட 21 மீனவ கிராம தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சுருக்குமடி வலையை அனுமதிக்காததை கண்டித்து திருமுல்லைவாசல் கிராமத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் நேற்று தங்களுடைய விசைப்படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.