துப்பாக்கி சூடு சம்பவத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. கைது: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

திருப்போரூர் அருகே நிலத்தகராறில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2020-07-14 01:36 GMT
திருப்போருர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இமயம்குமார் என்பவருக்கும், திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் தரப்பினருக்கும் செங்காடு கிராமத்தில் நிலத்துக்கு பாதை அமைப்பது தொடர்பாக கடந்த 11-ந்தேதி தகராறு ஏற்பட்டது.

இதில் இமயம்குமார் தரப்பினர் அரிவாளால் வெட்டியதில் எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி மற்றும் அவரது உறவினர் குருநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டதில் அந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் படுகாயம் அடைந்தார்.

இந்த மோதல் தொடர்பாக திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் போலீசார், எம்.எல்.ஏ. தரப்பினரை மட்டும் கைது செய்து, ஒரு தலைபட்சமாக நடந்துகொள்வதாக கூறி திருப்போரூர் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இமயம்குமார் தரப்பில் அவர் உள்பட சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இமயம் குமார் தரப்பை சேர்ந்த ரகுராமன், சண்முகம், ஜனார்த்தனன் ஆகிய மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்