சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: ஆலோசனைக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கான ஆலோசனைக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் அறிவுறுத்தினார்.

Update: 2020-07-09 23:07 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் தர்மபுரி, பாலக்கோடு ஆகிய உட்கோட்டங்களில் பணிபுரியும் போலீசாருக்கான அவசர ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி, பாலக்கோடு ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், துணை சூப்பிரண்டுகள் ராஜ்குமார், சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் ரத்தினகுமார், விஸ்வநாதன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கலந்து கொண்டு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முதல் போலீசார் வரை அனைவரும் கைதிகளை கைது செய்யும்போதும், கைதிகளை போலீஸ் காவலில் வைக்கும்போதும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கட்டாயம் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் முககவசம் அணிந்திருக்க வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்திருத்தல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

தொப்பூர், காடுசெட்டிப்பட்டி, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் இ-பாஸ் தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள போலீசார் முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை விசாரணைக்கு உட்படுத்தும் போது சட்டவிதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பேசினார்.

மேலும் செய்திகள்