கொரோனா தடுப்பு நடவடிக்கை: திசையன்விளையில் மீன்- காய்கறி கடைகள் இடமாற்றம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திசையன்விளையில் மீன், காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன.;
திசையன்விளை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திசையன்விளையில் மீன், காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன.
கொரோனா அபாயம்
ஊரடங்கு காரணமாக திசையன்விளை வாரச்சந்தை வளாகத்தில் இயங்கி வந்த மீன், கருவாடு மற்றும் காய்கறி மார்க்கெட் வடக்கு பஜார் காமராஜர் சாலை, நேரு திடல் பகுதியில் தற்காலிகமாக சாலை ஓரங்களில் இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மீன், கருவாடுகளை வாங்க அதிக அளவில் கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு வருகிற 13-ந் தேதி முதல் மீன், கருவாடு மார்க்கெட் திசையன்விளை தீயணைப்பு நிலையம் மேல்புறமுள்ள பாலம் அருகிலும், காய்கறி கடைகள் திசையன்விளை- இட்டமொழி சாலையில் உள்ள வேன் நிறுத்தும் இடத்திற்கு எதிரிலும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அபராதம் வசூலிப்பு
திசையன்விளை பஜார் கடை வியாபாரிகள் சமூக இடைவெளி விட்டு வியாபாரம் செய்ய வேண்டும். இல்லையேல் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திசையன்விளை தாசில்தார் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். நேற்று திசையன்விளை பஜாரில் நகரப்பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் ராஜா நம்பிகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் அய்யாத்துரை, சுகாதார ஆய்வாளர் எட்வின் மற்றும் போலீசார் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் வசூலித்தனர்.