கொரோனா நோயாளியின் உடல் மாற்றி ஒப்படைப்பு ஆஸ்பத்திரியின் அலட்சியத்தால் இரு குடும்பத்தினர் திகைப்பு

ஆஸ்பத்திரியின் அலட்சியத்தால் கொரோனா நோயாளியின் உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரிடம் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-07-08 23:15 GMT
தானே,

ஆஸ்பத்திரியின் அலட்சியத்தால் கொரோனா நோயாளியின் உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரிடம் திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாயமான முதியவர்

தானேயை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தானேயில் மாநகராட்சியால் புதிதாக அமைக்கப்பட்ட குளோபல் அப் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த முதியவர் சமீபத்தில் திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் குடும்பத்தினர் காபுர்பாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தேடிவந்தனர்.

இதில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதும், அவரது உடல் கோப்ரி பகுதியை சேர்ந்த மற்றொரு கொரோனா நோயாளியின் குடும்பத்தினரிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்டு விட்டதும் தெரியவந்தது. அவர்களும் தங்களது குடும்பத்தை சேர்ந்தவர் தான் என்று கருதி அந்த உடலுக்கு தடபுடலாக இறுதிச்சடங்கும் செய்து விட்டனர். பின்னர் அடுத்த நாளும் இறந்த மற்றொரு கொரோனா நோயாளியின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குடும்பத்தினர் திகைப்பு

அப்போது தான் முதலில் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல் வேறு ஒருவருடையது என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த இந்த தவறு இரண்டு குடும்பத்தினருக்கும் திகைப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மாவுக்கு மேயர் நரேஷ் மஸ்கே கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் செய்திகள்