நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ்காரருக்கு கொரோனா கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது
நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது.
கொரோனா தொற்று
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு உள்ளிட்ட இடங்களில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு வந்துவிட்டது.
இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது
அதைத் தொடர்ந்து அவருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் தொடங்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு அறையில் மேலும் சில போலீசார் பணியில் இருந்ததால் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்பட்ட கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது. அதற்கு பதிலாக கோட்டாரில் கட்டுப்பாட்டு அறை செயல்பட தொடங்கி உள்ளது. அதோடு கொரோனா பாதித்த போலீஸ்காரருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கிருமிநாசினி தெளிப்பு
நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் ஊழியராக பணியாற்றி வரும் 24 வயதுடைய பெண்ணுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடைய தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கோர்ட்டு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பிளச்சிங் பவுடரும் தூவப்பட்டது.