பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மங்களமேடு,
மங்களமேட்டை அடுத் துள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்பு அனைத்து விவசாயிகள் சங்கம், பங்குதாரர்கள் சங்கம் மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி ஞானமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நடப்பு ஆண்டில் கரும்பு டன் 1-க்கு ரூ.4,000 ஆக அறிவிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய பாக்கித்தொகை ரூ.33 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த மற்றும் தற்காலிக காலிப்பணியிடங்களில் பணியாளர்களை நியமிக்கும்போது இடஒதுக்கீடு முறையில் நிரப்ப வேண்டும்.
மனு
இணை மின் திட்டத்திற்கும், ஆலை விரிவாக்கத்திற்கும் விவசாயிகளிடம் பெறப்பட்ட பங்குத்தொகைக்கு பங்குப்பத்திரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் துரைதேன்துளி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆலை தலைமை நிர்வாகி முகம்மது அஸ்லாமை சந்தித்து தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.