கொந்தகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு

கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-07-08 03:01 GMT
திருப்புவனம், 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணி நடந்துவருகிறது.

இந்த நிலையில் கொந்தகையில் நேற்று நடந்த அகழாய்வு பணியில் குழந்தையின் முழு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எலும்புக்கூட்டினை சேதாரம் இல்லாமல் முழுமையாக தோண்டி எடுத்து சுத்தம் செய்தனர். அதன் அளவை கணக்கிடும்போது 95 செ.மீ. உயர குழந்தையின் எலும்புக்கூடு என்பது தெரியவந்தது.

மரபணு சோதனை

இதன் தலை பகுதி மட்டும் 20 செ.மீ. இருக்கும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குழந்தையின் எலும்புக் கூடு கிடைத்த இடத்தின் அருகே கடந்த மாதம் 75 செ.மீ. உயரம் உள்ள குழந்தையின் எழும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த எலும்புக் கூடுகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்