தேனி உள்பட 3 இடங்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி,
சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசாரை விசாரணைசெய்து உடனடியாக தண்டனை வழங்க வேண்டும், போலீஸ் துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்ட விரோத செயல்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் மாவட்டந்தோறும் சுயேச்சையான விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும், சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு, அரசு மருத்துவர், கோவில்பட்டி சிறை அதிகாரி ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறை நண்பர்கள் அமைப்பை கலைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் தமிழ்ப்பெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதுபோல் ஆண்டிப்பட்டி, கம்பத்திலும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.