மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது சிகிச்சையில் இருந்த மேலும் 5 பேர் சாவு
மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. மேலும் சிகிச்சையில் இருந்த 5 பேர் இறந்தனர்.
மதுரை,
மதுரையில் நேற்று ஒரே நாளில் 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 28 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், மீதமுள்ள 280 பேர் மதுரை நகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 22 பேர் பாதிக்கப்பட்டனர்.
வெளி மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், வெளி மாவட்டத்திற்கு சென்று வந்த ஒருவருக்கும், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், 14 கர்ப்பிணிகளுக்கும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 82 பேருக்கும் என மொத்தம் 308 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர்.
இதுபோல் 168 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. இதனை தொடர்ந்து அவர்களை அரசு மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தபோது அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் உசிலம்பட்டி மற்றும் ஆஸ்டின்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றிய 7 போலீஸ்காரர்களுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது .
1,048 பேர் குணமடைந்தனர்
கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் 308 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,085 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 1048 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
5 பேர் சாவு
இந்தநிலையில் மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 5 பேர் நேற்று திடீரென உயிரிழந்தனர். மதுரை பகுதியை சேர்ந்த 54 வயது ஆண், 70 வயது முதியவர், 50 வயது பெண், 69 வயதுடைய முதியவர்கள் 2 பேர் என 5 பேர் தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தனர். இந்தநிலையில் அவர்கள் திடீரென உயிரிழந்தனர்.
இதன் மூலம் மதுரையில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.