முழு ஊரடங்கை கடைப்பிடிக்கக்கோரி பாகாயம் போலீசார் மோட்டார்சைக்கிளில் அணிவகுப்பு சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களுக்கு எச்சரிக்கை
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை கடைப்பிடிக்கக்கோரி பாகாயம் போலீசார் நேற்று மோட்டார்சைக்கிளில் முக்கிய சாலைகளில் அணிவகுப்பு நடத்தினர்.;
வேலூர்,
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை கடைப்பிடிக்கக்கோரி பாகாயம் போலீசார் நேற்று மோட்டார்சைக்கிளில் முக்கிய சாலைகளில் அணிவகுப்பு நடத்தினர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் இந்த மாதம் (ஜூலை) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மருந்துக்கடைகளை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. அதேபோல் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. எனினும், பொதுமக்கள் வழக்கம்போல் சாலைகளில் நடமாடினர். இளைஞர்கள் மோட்டார்சைக்கிள்களில் தேவையின்றி அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்தனர்.
மோட்டார்சைக்கிளில் அணிவகுப்பு
வேலூர் பாகாயம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை கடைப்பிடிக்கக்கோரியும், இந்த மாதத்தில் உள்ள மற்ற ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் மோட்டார்சைக்கிள்களில் அணிவகுப்பு நடந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டனர். பின்னர் அவர்கள் ஓட்டேரி, சாய்நாதபுரம், சங்கரன்பாளையம், அண்ணாசாலை, கலெக்டர் பங்களா, டி.ஐ.ஜி. அலுவலகம், தொரப்பாடி வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தில் அணிவகுப்பை நிறைவு செய்தனர்.
எச்சரிக்கை
ஊர்வலத்தின்போது ஒலிப்பெருக்கியில் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வந்தால் வழக்குப்பதிந்து கைது செய்யப்படுவீர்கள். கொரோனா தொற்று தடுப்பு பணியில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் சாலைகளில் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அணி வகுப்பை தொடர்ந்து பாகாயம் போலீசார் சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.