நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் சாலைகள் வெறிச்சோடின.
ஊட்டி,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சுற்றுலா நகரமான ஊட்டியில் நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. மார்க்கெட்டுக்கு செல்லும் 16 நுழைவாயில்களும் பூட்டப்பட்டு இருந்தது.
ஏ.டி.சி. காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் உழவர் சந்தை அடைக்கப்பட்டது. மேலும் கமர்சியல் சாலை, லோயர் பஜார், மெயின் பஜார், அப்பர் பஜாரில் உள்ள காய்கறி, மளிகை, நகைக்கடைகள், பேக்கரிகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஊட்டியில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்கவில்லை. ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் ஓடவில்லை.
சாலைகள் வெறிச்சோடின
ஊட்டி மத்திய பஸ் நிலைய பகுதி, ராஜீவ்காந்தி ரவுண்டானா, சேரிங்கிராஸ், ஏ.டி.சி. உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி இருந்தது. ஊட்டியில் கோடப்பமந்து, நொண்டிமேடு, பிங்கர்போஸ்ட், காந்தல், பெர்ன்ஹில், எல்க்ஹில் உள்பட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடித்தனர். அவசிய தேவையான பால் விற்பனை கடைகள், மருந்துக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மேலும் ஊட்டியில் 2 அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டது.
இதற்கிடையில் ஊட்டியில் காலையில் இருந்தே அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. போலீசார் குடை பிடித்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனங்களில் ரோந்து சென்று ஊரடங்கை மீறி வெளியில் யாராவது சுற்றுகிறார்களா? என்று கண்காணித்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் 500 போலீசார், 200 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். ஊட்டி, குன்னூர், கூடலூர், மஞ்சூர், கோத்தகிரி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் போலீசார் சாலைகளில் தடுப்புகள் வைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
கூடலூரில் மழை
முழு ஊரடங்கு காரணமாக கூடலூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோ, ஜீப்புகள் உள்பட வாடகை வாகனங்கள் ஓடவில்லை. மேலும் பொதுமக்கள் நடமாட்டமும் இல்லை. மருந்து கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்து இருந்தன. ஆனால் வாடிக்கையாளர்கள் வருகை இல்லை. மேலும் கூடலூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி கிடந்தது. இதே நிலை பந்தலூர், மசினகுடி பகுதியிலும் காணப்பட்டது. இதற்கிடையில் கூடலூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவியது.
இதேபோன்று கோத்தகிரி நகர் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகள், பொது இடங்களில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. பால் விற்பனை நிலையங்கள் காலையில் 1 மணி நேரம் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. அதன்பிறகு அடைக்கப்பட்டன. ஆனால் மருந்து கடைகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் வழக்கம்போல் செயல்பட்டன. மேலும் மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இது தவிர தேவையில்லாமல் வெளியே வந்த ஒருசிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுத்தனர்.