தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 1,000-ஐ தாண்டியது நெல்லை, தென்காசியில் டாக்டர் உள்பட 71 பேருக்கு தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1,000-ஐ தாண்டியது. நெல்லை, தென்காசியில் டாக்டர் உள்பட 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1,000-ஐ தாண்டியது. நெல்லை, தென்காசியில் டாக்டர் உள்பட 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
1,000-ஐ தாண்டியது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,028-ஆக அதிகரித்தது.
தூத்துக்குடி அருகே ராமச்சந்திரபுரத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று பூபாலராயர்புரம், அலங்காரத்தட்டு, சங்குகுளி காலனி, திரேஸ்புரம் பகுதியிலும், மீன்வளத்துறை ஊழியர் ஒருவருக்கும், பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியில் ஒருவருக்கும், புதுக்கோட்டை டாக்டர் ஒருவர் உள்பட 70 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி உள்ளது.
நெல்லையில் 49 பேர் பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து உள்ளது. நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பெண் டாக்டர் மற்றும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தியாகராஜ நகரை சேர்ந்த அந்த பெண் டாக்டர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து உடனடியாக கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் நெல்லை மாநகரை சேர்ந்த 2 போலீசாருக்கும் கொரோனா பரவி உள்ளது. அவர்களும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி நெல்லை சந்திப்பு போலீஸ் குடியிருப்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடர் தூவி சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா அறிகுறி காணப்பட்டுள்ள 49 பேரில் நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 22 பேர் ஆவர். இதுதவிர அம்பை பகுதியில் 7 பேர், மானூரில் 6 பேர், பாளையங்கோட்டை ஊரக பகுதியில் 8 பேர், பாப்பாக்குடியில் 2 பேர், வள்ளியூரில் 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 830 பேருக்கு கொரோனா பரவி இருந்தது. நேற்று 49 பேருடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 879 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம்
இதேபோல் தென்காசியிலும் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த மாவட்டத்தில் ஏற்கனவே 365 பேருக்கு கொரோனா பரவி இருந்தது. இந்த 22 பேருடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது. இதில் 204 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதி 182 பேர் தென்காசி மற்றும் நெல்லை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.