கோவை மாவட்டத்தில் 24 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களை பரிசோதிக்க முடிவு
கோவை மாவட்டத்தில் 24 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.;
கோவை,
ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட பின்னர் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் கோவையில் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. டெல்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து கோவைக்கு விமானங்கள் வந்து செல்கின்றன. இதேபோல் கோவை மண்டலத்துக்குள் பஸ் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.
வெளியூரில் இருந்து வந்த பயணிகள் மூலம் கோவையில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. பொதுமக்களும் சகஜமாக நடமாடி வருகிறார்கள். இதைத்தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
24 ஆயிரம் பேருக்கு பரிசோதனை
கொரோனா பரவும் நிலை தொடர்ந்து உள்ளதால், குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்துக்கு விமானங்கள், ரெயில் மூலம் வருபவர்கள், அண்டைய மாநிலமான கேரளாவில் இருந்து வாளையாறு வழியாக வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் 24 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அடுத்தக்கட்டமாக கொரோனா பாதிக்க வாய்ப்புள்ள சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்து உள்ளோம்.
பரிசோதிக்க முடிவு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்கள் 80 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தான். எனவே சர்க்கரை நோய், இருதய கோளாறு, நுரையீரல் பாதிப்பு போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்துக்கு மாத்திரை எடுத்துக்கொள்ளும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து சளி மாதிரிகளை எடுத்து பரிசோதிக்க திட்டமிட்டு உள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.
பாதுகாக்க முடியும்
இவர்கள் வீடுகளில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக பொள்ளாச்சி வட்டாரத்தில் பணிகள் தொடங்கப் படும். இதன் மூலம் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி உள்ளதா? என்பதை கண்டுபிடிக்க முடியும். மேலும் முதியவர்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.