எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வினியோகம் முக கவசம்-கை கழுவும் திரவமும் வழங்கப்பட்டது

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு நேற்று அந்தந்த பள்ளிகளில் ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அவர்களுக்கு முககவசம், கை கழுவும் திரவமும் வழங்கப்பட்டது.

Update: 2020-06-09 03:08 GMT
நெல்லை, 

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு நேற்று அந்தந்த பள்ளிகளில் ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அவர்களுக்கு முககவசம், கை கழுவும் திரவமும் வழங்கப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி தேர்வுக்கூடங்களை தயார் செய்யும் பணியை அந்தந்த மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டு எனப்படும் ஹால் டிக்கெட்டை தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிட்டது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஹால் டிக்கெட் வினியோகம்

நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 311 மையங்களில் நடத்தப்படுகிறது. கூடுதலாக 9 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 28 ஆயிரத்து 33 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகிறார்கள்.

இவர்களுக்கு உரிய ஹால்டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேற்று தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். அதே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளும் வந்தனர். அவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இன்றும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நேற்று ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. ஒரு சில தனியார் பள்ளிகளில் தேர்வு தொடங்கும் 15-ந்தேதி பள்ளிக்கு வந்த உடன் மாணவ-மாணவிகளிடம் ஹால்டிக்கெட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அவர்களுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நடைமுறைகள் குறித்து விளக்கி கூறினர். அதேபோன்று தேர்வு மையங்களுக்கு தெர்மல் ஸ்கேனர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதனை கொண்டு மாணவர்களை எப்படி பரிசோதனை செய்வது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளை அந்தந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். அவர்களுக்கு ஹால் டிக்கெட் மற்றும் 2 முக கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. தேர்வு எழுத வரும்போது முககவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 203 மையங்களில் 17 ஆயிரத்து 446 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் தேர்வு எழுதும் பள்ளிகளிலேயே ஹால் டிக்கெட் நேற்று வழங்கப்பட்டது. கொரோனா பிரச்சினையினால் ஒரு அறைக்கு 10 மாணவ- மாணவிகள் வீதம் அமர வைக்கப்பட்டு சமூக இடைவெளியில் தேர்வுகள் நடைபெறுகின்றன.

மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்காக ஹால் டிக்கெட்டுடன் முககவசம் மற்றும் கை கழுவும் திரவம் ஆகியவை வழங்கப்பட்டன. பெரும்பாலான மாணவ- மாணவிகள் நேற்று ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டனர். இந்த பணி இன்றும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கருப்பசாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்