பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது.

Update: 2020-06-05 05:21 GMT
பனைக்குளம்,

மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சியில் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வினைதீர்க்கும் வேலவர் கோவில். இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வந்து வழிபட்டு செல்வார்கள். மேலும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவையொட்டி ஏராளமான பக்தர் காப்புகட்டி விரதம் இருந்து பால்குடம் எடுத்தும், பூவில் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். விழாவில் பட்டணம்காத்தான், ராம்நகர், கலெக்டர் அலுவலக குடியிருப்பு, பாரதிநகர், ஆயுதப்படை குடியிருப்பு, கடம்பாநகர், சுப்பையா நகர், ஓம்சக்தி நகர், டி-பிளாக், நேருநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் நடைபெற அனுமதியில்லை. இருப்பினும் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வைகாசி விசாக விழாவையொட்டி நேற்று பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த ஒரு சில பக்தர்கள் மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை கோவில் நிர்வாகி கருப்பையா சுவாமிகள் குடும்பத்தினர் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது, ஒன்றிய கவுன்சிலரும், தாலுகா வீட்டு வசதி சங்க தலைவருமான மருதுபாண்டியன் ஆகியோர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்