திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரெயில் 275 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரெயில் 275 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

Update: 2020-06-02 03:51 GMT
திருச்சி, 

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரெயில் 275 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

ரெயில் போக்குவரத்து

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் 5-வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவானது வருகிற 30-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றாலும் மத்திய அரசின் அனுமதியுடன் பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்தில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதன்படி தமிழகத்தில் 4 முக்கிய வழித்தடங்களில் ஜூன் 1-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது. இதனை தொடர்ந்து கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரெயில்கள், கோவை-காட்பாடி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய 4 ரெயில்களிலும் பயணிப்பதற்கான முன்பதிவு உடனடியாக தொடங்கியது. பயணிகள் நீண்ட வரிசையில் நின்று தங்களது பயணத்திற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

திருச்சியில் இருந்து புறப்பட்டது

இந்நிலையில் ஊரடங்கு தளர்வை தொடர்ந்து திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரெயில் நேற்று காலை 6 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. மொத்தம் 19 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்த இந்த ரெயிலில் 275 பயணிகள் பயணம் செய்தனர். குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒரு பெட்டியும் இருந்தது. இந்த பெட்டியில் 4 பயணிகள் மட்டுமே இருந்தனர். பயணிகளும், ரெயில்வே ஊழியர்களும் முக கவசம் அணிந்து இருந்தனர்.

இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகளுக்கு முதலில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களது முன்பதிவு டிக்கெட் சரிபார்க்கப்பட்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ரெயில் அருகில் சென்றதும் ரெயில்வே ஊழியர்கள் அவர்களது கைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினார்கள். அதன் பின்னரே அவர்கள் ரெயிலில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

காலியாகவே இருந்தன

பெரும்பாலான பெட்டிகள் காலியாகவே இருந்தன. சில பெட்டிகளில் குறைந்த அளவிலான பயணிகள் இருந்தனர். இந்த ரெயிலில் பயணிப்பதற்காக அருண் என்பவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் வந்திருந்தார். அருண் கூறுகையில் ‘நான் திருச்சியில் இருந்து மதுரைக்கு செல்கிறேன். மதுரை வாடிப்பட்டி தான் எனது சொந்த ஊர். அங்கு விவசாயம் செய்து வருகிறேன். எனது மாமனார் வீடு திருச்சி தாராநல்லூரில் உள்ளது. மாமனார் வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் விருந்துக்கு வந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் திருச்சியிலேயே குடும்பத்துடன் தவித்தேன். இப்போது எனது சொந்த ஊருக்கு இந்த ரெயில் மூலம் செல்வதை நினைக்கும்போது ஆனந்தமாக உள்ளது’ என்றார்.

ஜனசதாப்தி

மதுரையில் இருந்து புறப்பட்ட மதுரை-விழுப்புரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் காலை 9.10 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரெயிலில் விழுப்புரம் செல்வதற்காக காத்திருந்த பயணிகள் ஏறினார்கள். காலை 11.10 மணிக்கு கோவையில் இருந்து ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்