குமரியில் இன்று முதல் பஸ்கள் ஓடும் நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது

குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கு இன்று முதல் நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Update: 2020-06-02 00:33 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கு இன்று முதல் நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

பஸ் போக்குவரத்து

நாடு முழுவதும் 5-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன. தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

குமரி மாவட்டத்தில் பஸ் நிலையங்கள் காய்கறி சந்தைகளாக செயல்படுவதாலும், அதை மாற்ற வேண்டியிருப்பதாலும், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்களுடன் கலந்து பேசி எத்தனை பஸ்களை இயக்குவது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டியது இருப்பதாலும் 2-ந் தேதி (இன்று) முதல் பஸ்கள் இயக்கப்படும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

25 பயணிகள்

குமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாவட்டத்தில் பஸ்கள் இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நிபந்தனைகளுடன் இயக்கப்பட உள்ளது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்கள் (திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி) செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருவதால் பஸ்கள் வெளிப்புறம் நின்று செல்லும். பஸ்சில் பயணம் செய்ய 25 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பஸ் டிரைவர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பஸ்சில் அனுமதிக்கப்படுவர். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ள பயணிகள் எவரையும் பஸ்சில் பயணிக்க அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு பஸ் வழித்தடத்துக்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பயணிகள் பரிசோதனை செய்யப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

166 பஸ்கள்

இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படாததால் தூசியும், குப்பையாகவும் இருந்த அண்ணா பஸ் நிலையம் நேற்று மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை தலைமையில் மாநகராட்சி பணியாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. நாகர்கோவில் மண்டலத்தில் மொத்தம் உள்ள 760 பஸ்களில் (கேரள மாநில பஸ்களும் சேர்த்து) குமரி மாவட்டத்துக்குள் 160 டவுன் மற்றும் மபசல் பஸ்களும்,

நாகர்கோவில் திருநெல்வேலிக்கு 3 பஸ்களும், நாகர்கோவில் தூத்துக்குடிக்கு (வள்ளியூர் திருச்செந்தூர் வழியாக) 2 பஸ்களும், நாகர்கோவில் தூத்துக்குடிக்கு (உவரி திருச்செந்தூர் வழியாக) ஒரு பஸ்சும் என மொத்தம் 166 பஸ்கள் இயக்கப்பட உள்ளது என அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகிழ்ச்சி

இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுவது குறித்து டிரைவர், கண்டக்டர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். நாகர்கோவில் ராணித்தோட்டம் 2-வது பணிமனையை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (42):-

இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுவது எனக்கு மகிழ்ச்சிதான். பஸ்சில் 25 பயணிகளை மட்டுமே அனுமதிக்க கூறியிருக்கிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்புத்தர வேண்டும். இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் பஸ்சில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதைவிடுத்து டிரைவர், கண்டக்டர்களிடம் தகராறு செய்யக்கூடாது என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். டிரைவர், கண்டக்டர்கள் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவும் நல்லதுதான். அதையும் நாங்கள் பின்பற்றுவோம்.

ஒத்துழைப்பு

ராணித்தோட்டம் பணிமனையைச் சேர்ந்த கண்டக்டர் பிரபாகரன் (40):-

நீண்ட நாட்களுக்கு பிறகு அரசு பஸ்களை இயக்க உத்தரவிட்டு இருப்பது எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. கொரோனா நோயை கருத்தில் கொண்டு அரசு 25 பயணிகளை ஏற்றிச்செல்ல கூறியிருக்கிறது. அதேபோல் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று பயணிகளுக்கு அரசு கூறியுள்ளது. அதை கருத்தில் கொண்டு பயணிகள் பஸ்களில் பயணம் செய்தால் நன்றாக இருக்கும். ஒரு பஸ்சில் பயணிகள் சரியாக இருக்கும் பட்சத்தில் நாங்களும் ஏறிக்கொள்கிறோம் என்று பயணிகள் பிடிவாதம் பிடிக்காமல் அடுத்து பஸ்சில் பயணம் செய்து எங்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசு மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ள விதிமுறைகளின்படி நாங்களும் பாதுகாப்பான முறையில்தான் பஸ்சில் பணிபுரிவோம்.

மேலும் செய்திகள்