மதுரையில் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்தனர் ரெயிலில் பயணிக்க இ-பாஸ் கேட்பதால் பயணிகள் அதிர்ச்சி

ரெயிலில் பயணிக்க இ-பாஸ் கேட்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இன்று பயணிக்க இருந்த ரெயிலின் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்தனர்.

Update: 2020-05-31 22:46 GMT
மதுரை,

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து முக்கிய ஊர்களுக்கு இடையே ரெயில் போக்குவரத்து தொடங்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் 4 வழித்தடங்களில் மட்டும் ரெயில் போக்குவரத்து இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. அதில் மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது பயணிகள் சமூக இடைவெளியுடன் நின்று முன்பதிவு செய்தனர். இதற்கிடையில் ரெயில் போக்குவரத்து தொடங்குவதையொட்டி மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள 6 பிளாட்பாரங்களில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பயணிகள் சமூக விலகலை பின்பற்ற பிளாட்பாரங்களில் கோடுகள் வரையப்பட்டுள்ளன.

மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறிகளை ஆய்வு செய்ய தெர்மல் ஸ்கேனர் கருவிகளை கையாளும் மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டனர். இதுதவிர மதுரையில் இருந்து இன்று கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் மற்றும் பெட்டிகள் அனைத்தும் நேற்று சுத்தம் செய்யப்பட்டன. சுமார் 2 மாதத்திற்கு பிறகு மதுரையில் இருந்து ரெயில் இயக்கப்படுவதால் அதிகாரிகள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

பயணிகள் அதிர்ச்சி

இதற்கிடையே நேற்று காலை வரை ரெயிலில் பயணிக்க இ-பாஸ் அவசியம் வேண்டும் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் அனைவரும் சொந்த ஊர் செல்வதற்காகவும், மருத்துவ தேவை மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கான ஆயத்த ஏற்பாடுகளில் இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலையில் திடீரென மண்டலங்களை விட்டு வெளியே செல்வதால் ரெயில்களில் பயணிக்க இ-பாஸ் அவசியம் என்ற அறிவிப்பு வெளியானது. இது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இதற்கு பயணிகள் எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து முன்பதிவு செய்த பயணிகள் சிலர் கூறும்போது, “இ-பாஸ் தேவையில்லை என்பதால் தான் ரெயில்களில் முன்பதிவு செய்தோம். ஆனால் திடீரென இ-பாஸ் அனுமதி தேவை என அரசு கூறுவது நியாயமற்றது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கிறோம். எனவே ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம் என்ற விதிமுறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இ-பாஸ் அவசியம் என்ற விதிமுறை அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை நேற்று அவசரம் அவசரமாக ரத்து செய்தனர். இதனால் இன்று இயக்கப்பட இருக்கும் ரெயில்களில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக உள்ளன. 

மேலும் செய்திகள்