மைசூருவில் இருந்து சிறப்பு ரெயிலில், 800 வெளிமாநில தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர்

கொரோனா ஊரடங்கால் கர்நாடகத்தில் வேலை பார்த்து வந்த ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் இங்கேயே சிக்கித் தவித்தனர்.

Update: 2020-05-31 22:00 GMT
மைசூரு,

மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களிலும் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த நிலையில் வெளிமாநில தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் கர்நாடகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மைசூருவில் இருந்து அசாம் மற்றும் வடமாநிலங்களை இணைக்கும் வகையில் ஒரு சிறப்பு ரெயில் புறப்பட்டது. அந்த சிறப்பு ரெயிலில் 800 வெளிமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன், தங்களது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு புறப்பட்டு சென்றனர். அவர்கள் மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஆவர்.

முன்னதாக மைசூரு ரெயில் நிலையத்திற்கு வந்த அவர்கள் அனைவருக்கும் மாவட்ட சுகாதார துறையினர் சார்பில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அடையாள அட்டைகளும், உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன. அதையடுத்து அவர்கள் 800 பேரும் சிறப்பு ரெயிலில் புறப்பட்டு சென்றனர்.

இந்த ரெயில் மண்டியா, பெங்களூரு, ராமநகர் ஆகிய ஊர்களுக்கு சென்று அங்குள்ள வெளிமாநில தொழிலாளர்களையும் ஏற்றிக்கொண்டு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்