திருத்தணி முருகன் கோவில் படி பஜனை திருவிழா

திருத்தணி முருகன் கோவில் படி பஜனை திருவிழா ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது.

Update: 2017-12-28 22:53 GMT

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் இந்த மாதம் 31–ந்தேதி படிபஜனை திருவிழாவும். ஜனவரி மாதம் 1–ந்தேதி ஆங்கில புத்தாண்டு விழாவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. படி பஜனை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகபெருமானை வழிபடுவார்கள். மேலும் ஆயிரக்கணக்கான பஜனை குழுவினர் கலந்துகொண்டு கோவில் திருபடிகள் வழியாக தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு செல்வார்கள்.

ஆகவே இந்த விழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் திருத்தணியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன், கோவில் தக்கார் ஜெயசங்கர், இணைஆணையர் சிவாஜி, திருத்தணி ஆர்.டி.ஓ. ஜெயராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன் மற்றும் அரசுதுறை அதிகாரிகள், கோவில் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை, போலீஸ் துறை, மின்சாரத்துறை, திருத்தணி நகராட்சி, ரெயில்வே துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் படிபஜனை திருவிழாவுக்காக தங்களது துறையின் சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தெரிவித்தனர். இதை கேட்டறிந்த கலெக்டர் சுந்தரவல்லி படிபஜனை திருவிழா சிறப்பாக நடக்க அனைத்து துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும், விழாவில் கலந்துகொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உரியவகையில் செய்யப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

மேலும் பக்தர்களுக்கு தேவையான வகையில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், விழாவில் பக்தர்களின் கூட்டநெரிசலை தவிர்க்க கோவில் சார்பில் உரிய தரிசன வழிகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், போலீசார் சார்பில் பக்தர்களுக்கு உதவிடும் வகையில் வழிகாட்டு நெறிகள் ஏற்படுத்தி உதவிட வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கினார். திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் விழா சிறப்பாக நடத்திட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்