"இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த அவர் தகுதியானவர்" - யுவராஜ் தேர்வு செய்த இளம் வீரர்..!!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வருங்கால கேப்டன் குறித்து யுவராஜ் பேசியுள்ளார்.

Update: 2022-04-27 11:06 GMT
Image Courtesy : AFP
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இவர் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவராக விளங்கியவர்.

சமீபத்தில் ‘ஹோம் ஆஃப் ஹீரோஸ்’ நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். 

இது குறித்து அவர் பேசுகையில், " இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக நீங்கள் யாரையாவது இப்போதே தயார் செய்ய வேண்டும். டோனி எங்கிருந்தோ வந்து கேப்டனாக மாறினார். ஆனால் நீங்கள் அவரை சரியாக தேர்ந்தெடுத்தீர்கள்.

 ஒவ்வொரு அணியிலும் விக்கெட் கீப்பர் எப்பொழுதும் ஒரு நல்ல சிந்தனையாளராக இருப்பார். ஏனென்றால் அவர் எப்போதும் களத்தின் சிறந்த இடத்தில் நின்று கொண்டு இருக்கிறார். 

எனவே  ரிஷப் பண்ட் போன்ற வீரர்களுக்கு நீங்கள் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும். நீங்கள் அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும்.

மேலும் முதல் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் அவர் அற்புதங்களை நிகழ்த்துவார் என எதிர்பார்க்க வேண்டாம். அவர் தான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை வழிநடத்த தகுதியானவர்  " என தெரிவித்தார்.

தற்போது இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தி வரும் ரோகித் சர்மாவுக்கு 34 வயதாகிறது. இன்னும் குறைந்த ஆண்டுகளே அவர் அந்த பொறுப்பில் இருக்கக்கூடும் என்பதால் யுவராஜ் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்