"கோலியிடம் எதுவும் பேச வேண்டாம் என நினைத்தேன்" - ஸ்லெட்ஜிங் சம்பவத்தை நினைவு கூர்ந்த சூர்யகுமார் யாதவ்

கோலி- சூர்யகுமார் யாதவ் இடையே 2020 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும்.

Update: 2022-04-19 13:14 GMT
Image Courtesy : BCCI / IPL
மும்பை,

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது மும்பை - பெங்களூரு அணிகள் மோதிய போட்டியை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய மும்பை அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்தாலும் பின்னர் சூர்யகுமார் யாதவின் அதிரடியால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது அவர் அருகில் அப்போதைய எதிரணியின் கேப்டன் விராட் கோலி வர இருவரும் சில வினாடிகள் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக பார்த்து கொண்டு இருந்தனர்.

இந்த சம்பவம் அப்போது ரசிகர்கள் மத்தியில் மறக்கமுடியாத ஒன்றாக மாறியது. இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள சூர்யகுமார் யாதவ், " அது தான் விராட் கோலியின் ஸ்டைல். மைதானத்தில்  அவரது ஆற்றல் நிலை எப்போதும் வேறுபட்டது. 

மேலும் அந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருந்ததால் அந்த போட்டியில் கோலியின் ஸ்லெட்ஜிங் அதிகமாக இருந்தது. அதனால் நான் என் கவனத்தை இழக்க முடியாது.

 எப்படியும்  போட்டியில் வெற்றி பெற வேண்டும் என கவனம் செலுத்தினேன். அப்போது எதுவும் கோலியிடம் பேச வேண்டாம் என நினைத்தேன். பின்னர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி போட்டியை வெற்றிகரமாக முடித்தேன் " என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்