கோலியை கண்டபடி விமர்சித்த ஆஸ்திரேலிய பத்திரிகைகள்
வீராட் கோலியை கண்டபடி விமர்சித்த ஆஸ்திரேலிய பத்திரிகைகள்;
தர்மசாலா,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட தொடரை வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தர்மசாலாவில் நடந்த கடைசி டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றதன் மூலம் தொடரை கைப்பற்றியது. புனேயில் நடந்த முதல் டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் 75 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற் றன. ராஞ்சியில் நடந்த 3-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
இத்தொடரில் இதுவரை இல்லாத அளவு இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. டி.ஆர்.எஸ். விவகாரம், அமெரிக்க அதிபர் டிரம்புடன் கோலியை ஒப்பிட்டது, கோலியின் காயத்தை மேக்ஸ் வெல் கேலி செய்தது, முரளி விஜய்யை தகாத வார்த்தைகள் பயன்படுத்தி ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் வசைபாடியது உள்பட பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பு ஆஸ்திரேலிய அணியினரை நண்பர்கள் என்று கேப்டன் வீராட் கோலி குறிப்பிட்டார். ஆனால் இந்த டெஸ்ட் தொடரில் வீராட்கோலியை களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆஸ்திரேலிய அணியினர் கடுமையாக விமர்சித்தனர். இதன் காரணமாகவே அவர்கள் இனி நண்பர்கள் இல்லை என்று கோலி ஆவேசத்துடன் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய பத்திரிகைகள் வீராட் கோலி குறித்து விமர்சனம் செய்து உள்ளன.
சிட்னியிலிருந்து வெளியாகும், டெய்லி டெலிகிராப் பத்திரிகை, கோலியை ஈகோ பிடித்தவர் என வர்ணித்துள்ளது. மற்றொரு ஹெட்லைனில் கிளாஸ் வீரர் கிடையாது என வர்ணித்துள்ளது அந்த பத்திரிகை. தி ஆஸ்திரேலியன் பத்திரிகையின் பீட்டர் லலோர் எழுதுகையில், விளையாட்டின் ஸ்ப்ரிட் இந்திய அணிக்கு இல்லை. எனவேதான் ஆஸ்திரேலிய. கேப்டன் சேர்ந்து பீர் குடிக்கலாம் என அழைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
ஹெரால்ட் சன் பத்திரிகை நிருபர் ரஸ்சல் எழுதியுள்ள கட்டுரையில், மன்னிப்பு என்ற வார்த்தையை விராட் கோலி கூற வேண்டும். ஸ்டீவ் ஸ்மித் தான் செய்த தவறுகளுக்காக குறிப்பாக முரளி விஜய் பற்றிய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார் என்பதை கோலி புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.