'நெஞ்சுக்கு நீதி' படத்தை பார்த்து பாராட்டிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்
'நெஞ்சுக்கு நீதி' படத்தை பார்த்து பாராட்டிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டரில் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
ஆயுஷ்மான் குரானா நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஆர்டிக்கிள் 15' திரைப்படம், தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் கடந்த 9 ஆம் தேதி வெளியான நிலையில், வருகிற 20-ம் தேதி படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுரசித்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
முதல் அமைச்சர் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில், "அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.