"விக்ரம்" படத்தின் 'பத்தல பத்தல' பாடலுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ்..!!
'பத்தல பத்தல' பாடலுக்கு எதிராக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.;
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் "விக்ரம்". இந்த திரைப்படம் அடுத்த மாதம் 3-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” என்ற பாடல் கடந்த 11 ஆம் தேதி இரவு வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற இந்த பாடல் இன்று 2 கோடி பார்வைகளை கடந்து யூடியூப்-பில் சாதனை படைத்தது.
இந்த நிலையில் தற்போது 'பத்தல பத்தல' பாடலுக்கு எதிராக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலும், கொரோனா தடுப்பூசி திட்டத்தை கேலி செய்யும் வகையிலும் பாடல் வரிகள் இருப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய வரிகளை 2 நாட்களில் நீக்கி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோராவிடில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.