நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல்!

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் அடுத்த மாதம் திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2022-05-07 04:35 GMT
திருப்பதி, 

நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் கிட்டத்தட்ட 8 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இதனால் இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துள்ளது என்று ஏற்கனவே வந்த கிசுகிசுக்களை விக்னேஷ் சிவன் மறுத்தார். அதே வேளையில், விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று நயன்தாரா அறிவித்தார். மேலும், இருவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த நட்சத்திர ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண தேதியை முடிவு செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் அஜித்குமார் நடிக்கும் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் டைரக்டு செய்ய இருக்கிறார். இதில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது.அதன் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்த படப்பிடிப்புக்கு முன்பு திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட நிகழ்ச்சியின்போது, இவர்கள் இருவருக்குமிடையே ‘காதல்’ எப்போது உருவானது என்பது பற்றி விக்னேஷ் சிவனே கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, “நானும் ரவுடி தான் படம் முடிந்ததும், இன்னொரு செமயான படம் பண்ணிய பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்து விட்டோம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சீரடி சாய்பாபா கோவிலுக்கு ஜோடியாக சென்று சாமி கும்பிட்டனர். மேலும், சீரடி கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதனிடையே, இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியாக சாமியை தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டனர் என்று அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதனை தொடர்ந்து, நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் செய்திகள்